அன்னாஹசாரே குழு பிரசாரம்
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அன்னா ஹசாரே குழுவினர் பிரசார களத்தில் இறங்கியுள்ளனர். மணிப்பூர் தவிர மற்ற 4 மாநிலங்களிலும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசாரத்தை தொடங்கினார்கள். அரவிந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன் மற்றும் குழுவினர் பிரசாரம் செய்தனர். அப்போது உங்கள் வாக்கு இந்தியாவின் சரித்திரத்தை மாற்றும் என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டனர். பின்னர் பேசுகையில் கூறியதாவது:-
பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேற விடமால் காங்கிரசும், மற்ற அரசியல் கட்சிகளும் தடுத்து விட்டன. நாட்டு மக்களை மத்திய அரசு மோசடி செய்து விட்டது. அந்த அரசு மக்களுக்கு தேவையா என சிந்திக்க வேண்டும். நாங்கள் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ செயல்பட வில்லை.
லோக்பால் மசோதாவை நிறைவேற்ற எந்த கட்சியும் விரும்பவில்லை. லோக்பால் விசாரணை வரம்புக்குள் சி.பி.ஐ.யை கொண்டுவர வேண்டும் என்பன உள்பட அரசியல் கட்சிகளுக்கு 6 நிபந்தனைகள் விதித்து உள்ளோம். அரசியல் கட்சிகள் இதில் தங்கள் நிலையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
ராகுல் காந்தி, முலாயம்சிங் யாதவ், மாயாவதி ஆகியோர் லோக்பால் மசோதா நிறைவேற விடாமல் தடுத்தார்கள். சி.பி.ஐ. மூலம் ஊழல்வாதிகளை மத்திய அரசு பாதுகாக்கிறது. எனவே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. இருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு ராகுல் காந்தி பதில் அளிக்க வேண்டும்.
லோக்பால் மசோதா ஒட்டெடுப்புக்கு வந்த போது மாயாவதி கட்சி, முலாயம்சிங் கட்சி வெளிநடப்பு செய்தது ஏன்? இதன் மூலம் அவர்கள் காங்கிரசுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். மாயாவதியும், முலாயம் சிங் யாதவும் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நில மோசடியில் சிக்கி இருக்கிறார்கள். சி.பி.ஐ.யை வைத்து காங்கிரஸ் அவர்களை மிரட்டுகிறது.
லோக்பால் மசோதா ஒட்டெடுப்பு விவகாரத்தில் காங்கிரசுக்கு மறைமுக ஆதரவு தெரிவித்ததன் மூலம் தேர்தல் முடிந்ததும் அவர்கள் மீதான சி.பி.ஐ. வழக்குகளை வாபஸ் பெறுவதாக ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
நடுநிலையாளர்கள் என்ற நிலையில் அன்னாஹசாரே குழுவினரின் அதிரடி பிரசாரத்தால் அரசியல் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. பாரதீய ஜனதா ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் லோக் ஆயுக்தா கொண்டுவர ஆதரவு தெரிவித்துள்ளது.
இதேபோல் அந்த கட்சி ஆளும் மற்ற மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதற்கு அன்னா ஹசாரே குழு வரவேற்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



